உள்ளடக்கத்துக்குச் செல்

உரோமைப் பேரரசின் இறங்குமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
476இல்இருந்த மேற்கு உரோமைப் பேரரசும் கிழக்கு உரோமைப் பேரரசும்

உரோமைப் பேரரசின் இறங்குமுகம் என்பது எட்வர்டு கிப்பனால் 1776இல் ஆக்கப்பட்ட உரோமைப் பேரரசின் இறங்குமுகமும் வீழ்ச்சியும் என்ற நூலில் விவரிக்கப்பட்ட ஓர் கருத்துரு ஆகும். 4வது-5வது நூற்றாண்டுகளில் உரோமைப் பேரரசுக்கு என்னவாயிற்று என்பதை இன்னமும் வரலாற்றியலாளர்கள் விவாதித்து வருகின்றனர். பல கருதுகோள்கள் ஆராயப்பட்டுள்ளன; இவை பெரும்பாலும் அரசியல், பொருளியல்நிலை, படைத்துறை மற்றும் பிற சமூக அமைப்புக்களின் பிளவுகளால் ஏற்பட்டதாக தீர்வு காண்கின்றன. காட்டுமிராண்டிகளின் படையெடுப்பு மற்றும் உள்நாட்டுத் துரோகிகளால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் கருதுகின்றனர். இந்த வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய முற்பட்டதில் கிப்பன் முதலாமவர் இல்லை. அமெரிக்க அறிஞர் கிளென் போவெர்சாக் "18வது நூற்றாண்டிலிருந்து இந்த வீழ்ச்சி நம்மை ஈர்த்துள்ளது: இதுவே ஒவ்வொரு அரசு வீழ்ச்சிக்கும் மூல அடிப்படையாக மதிப்பிடப்படுகிறது; எனவே நமது அச்சங்களுக்கான அடையாளமாக உள்ளது." எனக் கூறியுள்ளார்.[1] 1984இல் செருமன் பேராசிரியர் அலெக்சாந்தர் தெமாந்த் உரோமை வீழ்ச்சிக்கான 210 பல்வேறு காரணங்களை தொகுத்துள்ளார்.[2][3]

இந்த இறங்குமுகம், பின்னோக்கிப் பார்க்கும்போது, நான்கு நூற்றாண்டுகளாக நிகழ்ந்துள்ளது; பரவலாக மேற்கத்திய உரோமைப் பேரரசின் கலைப்பு செப்டம்பர் 4, 476இல் நடந்ததாக கருதப்படுகிறது; செருமானிய குடித்தலைவன் ஓடொசர் கடைசி உரோமைப் பேரரசனான உரோமுலசு அகஸ்டசை அன்றுதான் முடியிறக்கச் செய்தான்.[4] ஆனால் இந்த திகதியை பேரரசின் வீழ்ச்சி நாளாகக் கொள்ள முடியாது என சில வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். இதற்கான காரணமாக கிழக்கு உரோமைப் பேரரசினால் அங்கீகரிக்கப்பட்ட யூலியசு நெபோசு தல்மாடியாவில் தொடர்ந்து வாழ்ந்து வந்ததைக் குறிப்பிடுகின்றனர்; யூலியசு நெபோசு 480இல் கொலை செய்யப்பட்டான். பின்னால் வந்த ஓஸ்ட்ரோகோத்துகள் தங்களை உரோமைப் பேரரசின் வம்சாவளியினராக கருதினர்.

378க்குப் பிறகு நடந்த பல நிகழ்ச்சிகள் மேற்கத்திய பேரரசின் நிலையை மோசமாக்கின. 378இல் நடந்த அட்ரியனோப்பிள் சண்டை, 395இல் தியோடொசியசின் மறைவு, 406இல் ரைன் ஆற்றைக் கடந்து வந்த செருமானியக் குடிகள், 408இல் இசுடிலிசோவின் மரண தண்டனை, 410இல் நடந்த உரோம் நகர ஆக்கிரமிப்பு, 421இல் கான்ஸ்டான்டியசு III மரணம், 454இல் பிளாவியசு ஏடியசின் மரணம், 455இல் மீண்டும் உரோமை நகரின் ஆக்கிரமிப்பு, 461இல் மயோரியனின் இறப்பு என பல நிகழ்வுகள் வெவ்வேறு வரலாற்றாளர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. அண்மைய கருதுகோள் ஒன்று இந்த வீழ்ச்சி சிக்கலான மாற்றங்களால் நிகழ்ந்ததாக குறிப்பிடுகிறது.[5]

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்

[தொகு]

உரோமைப் பேரரசின் வீழ்ச்சி பல நூற்றாண்டுகளில் நடைபெற்ற ஓர் படிப்படியான இறங்குமுகமாகும். எப்போது இந்த இறங்குமுகம் தொடங்கியது என்பதற்கு ஒருமித்த கருத்து எதுவும் இல்லை. வரலாற்றாளர்கள் பல நாட்களையும் காலக்கோடுகளையும் முன்வைக்கின்றனர்.

3வது நூற்றாண்டு
  • மூன்றாவது நூற்றாண்டு நெருக்கடி நிலை - அலெக்சாண்டர் செவெரசின் கொலைக்குப் பிறகான வன்முறைகள், ஆக்கிரமிப்பு, பிளேக்கு நோய்த்தாக்கு, பொருளியல் நிலையாமை (234 - 284)
  • பேரரசர் டியோக்லெடியனின் ஆட்சி (284 - 305) - பல அரசியல், பொருளியல் சீர்திருத்தங்களை முயன்றவர். இந்த சீர்திருத்தங்கள் பலவும் பிந்தைய நூற்றாண்டுகளிலும் செயற்பாட்டில் இருந்தன.
4வது நூற்றாண்டு
  • முதலாம் கான்ஸ்டன்டைனின் ஆட்சி (306 - 337) - புதிய கிழக்கத்திய தலைநகராக [[|இசுத்தான்புல்|கான்ஸ்டண்டினோப்பிளை]] கட்டினார்; கிறித்தவராக மாறி அச்சமயத்தை சட்டபூர்வமாக்கியதுடன் ஆதரவும் அளித்தார்.இவருக்குப் பின்வந்த அனைத்து உரோமானியப் பேரரசர்களும், யூலியன் நீங்கலாக, கிறித்தவர்களாவர்.
  • கோத்திக் போர் (376-382) - விசிகோத்துகளுடனான முதலாம் போர் - (இது ஆகத்து 9, 378இல் அட்ரியனோப்பிள் சண்டையில் முடிந்தது) பல உரோமை வீரர்கள் கொல்லப்பட்டனர், பேரரசர் வாலென்சு கொல்லப்பட்டார்.
  • முதலாம் தியோடோசியசு ஆட்சி (379 - 395) - உரோமைப் பேரரசின் மேற்கு, கிழக்கு இருபகுதிகளையும் ஒன்றிணைத்த கடைசி பேரரசர். தமது முன்னோர்களின் அஞ்ஞானிசக் கொள்கைகளை புறந்தள்ளி, சட்ட விரோதமாக்கி, கிறித்தவத்தை அரச சமயமாக்கினார்.
5வது நூற்றாண்டு
  • திசம்பர் 31, 406 (அல்லது சில வரலாற்றாளர்கள் கூற்றுப்படி 405)இல் நிகழ்ந்த ரைன் ஆறு கடப்பு: காட்டுமிராண்டிகளாக வர்ணிக்கப்படும் வான்டல்கள், ஆலன்கள், சூபிக்கள் மோகுன்டியகம் என்றவிடத்தில் உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து கால் பகுதியைச் சூறையாடியது. சிலர் இசுப்பானியா, (ஐபீரிய நாவலந்தீவிற்கான உரோமைப் பெயர்) ஆபிரிக்கா வரை முன்னேறினர். பேரரசால் பின்னர் எப்போதுமே இந்தப் பகுதிகளை மீண்டும் தன் கட்டுற்குள் கொணர இயலவில்லை.
  • விசிகோத்துகளுடனான இரண்டாம் போர் - கோத் அரசர் முதலாம் அலாரிக் தலைமையில் நடந்தது. இதில் கிரீசை தாக்கினர், இத்தாலியை ஆக்கிரமித்தனர். இப்போரின் உச்சமாக 410இல் உரோமை சூறையாடப்பட்டது. இந்நிகழ்வு ஆங்கிலத்தில் சாக் ஆஃப் ரோம் எனப்படுகிறது. இறுதியில் விசிகோத்துகள் இத்தாலியை விட்டகன்றனர்; தெற்கு காலிலும் இசுபானியாவிலும் விசிகோத்திய இராச்சியத்தை நிறுவினர்.
  • கிழக்கு ஐரோப்பிய ஹுன்கள் அட்டிலா மற்றும் பிளேடா ஆட்சிகளில் வலிமை பெற்று (434-453), பால்கன் குடா, கால், மற்றும் இத்தாலியைத் தாக்கினர். உரோமைக்கும் கான்ஸ்டண்டினோப்பிளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கினர்.
  • 455இல் நடைபெற்ற இரண்டாவது சாக் ஆஃப் ரோம் நிகழ்வு - இம்முறை வாண்டல்கள் சூறையாடினர்.
  • வாண்டல்களுக்கு எதிரான தாக்குதல்களின் தோல்வி (461 - 468). 461இல் மேற்கத்திய பேரரசர் மயோரியன் வாண்டல்களுக்கு எதிராக கடற்வழித் தாக்குதல் நடத்தி வடக்கு ஆபிரிக்காவை மீளவும் கைப்பற்ற திட்டமிட்டிருந்தார். இதனை முன்னதாகவே அறிந்த வாண்டல்கள் திடீர் தாக்குதல் நடத்தி முறியடித்தனர். 468இல் இரண்டாம் முறையாக முதலாம் லியோவும் ஆந்தெமியசும் அனுப்பிய கடற்படையும் தோல்வியைத் தழுவியது.
476இல் இருந்த ஐரோப்பா, மூயிரின் வரலாற்று நிலப்படத்திலிருந்து (1911).
  • கடைசி மேற்கத்தியப் பேரரசர்களான யூலியசு நெபோசு மற்றும் உரோமுலசு அகஸ்டசின் முடியிறக்கங்கள் (475 - 480). கிழக்கத்திய பேரரசர் செனோவால் நியமிக்கப்பட்ட நெபோசு கிளர்ந்தெழுந்த படைத்துறை தலைவர் பிளாவியசு ஒரெடெசால் முடியிறக்கப்பட்டார். ஒரெடெசு தமது மகன் உரோமுலசை அரியணை ஏற்றினார். செனோவும் அவரது எதிரி பாசிலிசுக்கசும் டால்மாடியாவிற்கு தப்பியோடிய யூலியசு நெபோசையே சட்டபூர்வ பேரரசராக அங்கீகரித்தனர். சிறுது காலத்தில் யூலியசால் நியமிக்கப்பட்ட படைத்தளபதி, ஒடோசெர் இத்தாலியைத் தாக்கி, ஒரெடெசை தோற்கடித்து செப்டம்பர் 4, 476இல் உரோமுலசு அகஸ்டசை பதவியிறக்கினார். ஒடோசெர் தாமே இத்தாலியின் அரசராக முடிசூட்டிக்கொண்டு பேரரசர் செனோவை கிழக்கு,மேற்கு இரு பேரரசுகளுக்கும் பேரரசராக இருக்க வேண்டினார். செனோ இதனை ஏற்று நெபோசின் உரிமையை மறுதளித்து ஒடோசெரை தமது அரச சார்பாளராக ஆட்சி புரிய அனுமதித்தார். 480இல் நெபோசு தமது படைவீரர்களாலேயே கொல்லப்பட்டார்.
  • இத்தாலியில் ஓஸ்ட்ரோகோத்திக் இராச்சியம் நிறுவப்படுதல் (493). ஒடோசெரின் சாதனைகளையும் புகழையும் கண்டு கவலையுற்ற செனோ அவருக்கு எதிரான பரப்புரை நடத்தினார்; பின்னர் ஓஸ்ட்ரோகோத்களை இத்தாலியைக் கைப்பற்றத் தூண்டினார். அவர்களும் அவ்வாறே செய்தனர்;ஆனால் தங்களுடைய தன்னாட்சியான இராச்சியத்தை, தியோடொரிக் அரசராக, இத்தாலியில் நிறுவினர். இத்தாலியையும் முழுமையான மேற்குப் பகுதியையும் உரோம்ப் பேரரசு இழந்தது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Bowersock, "The Vanishing Paradigm of the Fall of Rome" Bulletin of the American Academy of Arts and Sciences (1996) 49#8 pp 29-43 at p. 31.
  2. Alexander Demandt: 210 Theories, from Crooked Timber weblog entry August 25, 2003. Retrieved June 2005.
  3. Alexander Demandt: 210 Theories பரணிடப்பட்டது 2015-03-16 at the வந்தவழி இயந்திரம், Source: A. Demandt, Der Fall Roms (1984) 695. See also: Karl Galinsky in Classical and Modern Interactions (1992) 53-73.
  4. Arnaldo Momigliano, echoing the trope of the sound a tree falling in the forest, titled an article in 1973, "La caduta senza rumore di un impero nel 476 d.C." ("The noiseless fall of an empire in 476 AD").
  5. Hunt, Lynn (2001). The Making of the West, Peoples and Cultures, Volume A: To 1500. Bedford / St. Martins. p. 256. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-18365-8. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)

வெளி இணைப்புகள்

[தொகு]