Published : 02 Jun 2018 09:05 am

Updated : : 02 Jun 2018 11:17 am

 

கற்பனையால் ரசிகர்களை வியக்க வைப்பதே வெற்றி; எல்லாவற்றையும் தாண்டிய இசை ஒன்று இருக்கிறது!: இசைஞானி இளையராஜா சிறப்பு நேர்காணல்

பிரசாத் ஸ்டுடியோ. இளையராஜாவின் கற்பனையில் முகிழ்த்த ஆயிரக்கணக்கான பாடல்கள் ஒலி வடிவம் எடுத்த இடம். அவரது பல பாடல்களில் தவழும் ஆத்மார்த்தமான அமைதி, ஸ்டுடியோ முழுவதும் வியாபித்திருக்கிறது. வெளியில் வெவ்வேறு மொழித் திரைப்படத் தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். இசைப்பதிவுக்கான ஏற்பாடுகளில் இசைக் கலைஞர்கள் மூழ்கியிருக்கிறார்கள். தனது ஆஸ்தான அறையில், ரமண மகரிஷி, ஆதிசங்கரர் படங்களுக்கு நடுவே ஒரு யோகியின் புன்னகையோடு அமர்ந்திருக்கிறார் இளையராஜா. இன்று அவரது 75-வது பிறந்தநாள். இதையொட்டி,‘தி இந்து’ தமிழ் வாசகர்களுக்காக அவர் அளித்த மனம்திறந்த நேர்காணல்:

 

முதலில், இசை ரசிகர்கள் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ‘ஞானதேசிகன்’ என்ற சிறுவனாக நீங்கள் கண்ட கனவுகளை, இன்று 75-வது வயதில் திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?

பெற்றோர் எனக்கு முதலில் இட்ட பெயர் ஞானதேசிகன்தான். ஆனால் பள்ளியில் சேர்த்தபோது ராஜய்யா என்ற பெயரில் பதிவு செய்தனர். ஒரு எளிய கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் நான். இன்றைக்கு இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருக்கலாம். ஆனால், எதிர்காலம் குறித்த கனவுகளுக்கெல்லாம் அன்று என் குடும்ப சூழலில் வாய்ப்பு இருந்ததில்லை.

இளம் வயது நினைவுகளைச் சொல்லுங்களேன்..

எனக்கு நினைவில் இருப்பது, நான் படித்த ஆரம்பப் பள்ளிக்கூடம், அரு கில் இருந்த பிள்ளையார் கோயில், பாதையின் ஓரங்களில் அடர்ந்திருந்த செம்பருத்திச் செடிகளும் அதன் பூக்களும், அந்தப் பள்ளியை நடத்திவந்த பெருமாள் வாத்தியாரும்தான். நான் பள்ளிக்கூடம் போக, ஒரு வீட்டினுள் புகுந்துதான் செல்வேன். அந்த வீடு மட்டுமல்ல, அந்த வீட்டின் அம்மையாரும் இன்றும் என் நினைவில் உள்ளார்.

உங்களை உலகுக்கு அடையாளம் காட்டிய ‘அன்னக்கிளி’ பற்றி..

பாடல்களுக்காக எடுக்கப்பட்ட படம் ‘அன்னக்கிளி’. என் நண்பரும் கதாசிரியருமான செல்வராஜ் அடிக்கடி பஞ்சு அருணாசலத்தைச் சந்திப்பதுண்டு. என்னைப் பற்றி அவரிடம் சொல்லியிருக்கிறார். “ஒருமுறை பஞ்சு அருணாசலத்தைப் பார்த்துவிட்டு வா” என்றார் செல்வராஜ். நான் சென்று சந்தித்தேன். “பாட்டு ஏதாவது பண்ணியிருக்கியா? இருந்தால் பாடிக்காட்டு” என்றார். தயாராக இருந்த அனைத்துப் பாடல்களையும் பாடிக் காண்பித்தேன். அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. “ஒரு நகைச்சுவைப் படத்துக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். உன் பாடல்களுக்கென்றே ஒரு கதையை உருவாக்கிவிட்டு, பிறகு உன்னை அழைக்கிறேன். அதுவரை யாரிடமும் சொல்லிக்கொள்ள வேண்டாம்” என்றார். 3 மாதங்களில் இந்தப் பாடல்களையே ஆதாரமாக வைத்து, செல்வராஜ் எழுதியிருந்த கதையில் ‘அன்னக்கிளி’ படத்தைத் தொடங்கினார்.

வேறு சில படங்களும் பாடல்களை வைத்தே உருவாக்கப்பட்டன என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தைச் சொல்லலாம். ‘காக்கிச் சட்டை’ படத்தின் பாடல்களை கம்போஸ் செய்வதற்காக 3 நாட்கள் வெளியூரில் ரூம் போட்டிருந்தார்கள். அனைத்துப் பாடல்களும் முதல் நாளே அரை மணி நேரத்தில் முடிந்துவிட்டதால், நேரத்தை வீணாக்காமல் மீண்டும் 6 பாடல்களை கம்போஸ் செய்துவைத்தேன். பஞ்சு சார் இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு அதிலிருந்து ஒரு பாடலை மட்டும் தனக்குத் தரும்படி கேட்டார். மறுத்துவிட்டேன். பஞ்சு சார், “ஏய்.. எனக்கே இல்லை என்று சொல்கிறாயா?” என்றார். “யாராக இருந்தாலும் என் பதில் ஒன்றுதான். 6 பாடல்களும் ஒரே படத்தில் வருவதானால் தருகிறேன்” என்றேன். “சரி, ‘வைதேகி காத்திருந்தாள்’ படப்பிடிப்புக்காக அவசரமாக ஒரு பாடல் கேட்கிறார்கள். இதை அவர்களுக்குக் கொடு” என்றார். அதுதான் ‘மேகங் கருக்கையிலே’ பாடல். மற்ற பாடல்களையும் அவர்களே எடுத்துக் கொண்டார்கள்.

‘அன்னக்கிளி’ வெளியாகி, முதல் ஓரிரு ஆண்டுகளில் தங்களது இசையமைப்பில் மிகப் பெரிய மாற்றங்களை உணர முடிந்தது. இதை எப்படி திட்டமிட்டீர்கள்?

நான் திரைத் துறையில் அடி எடுத்து வைத்தபோது இருந்த இசையும், என் மனதில் தோன்றிய கற்பனைகளும் வேறுவேறாக இருந்தன. நடைமுறை யில் இருந்த திரையிசைப் பாணியை கற்கவேண்டி இருந்தது. அவ்வாறு இல்லாவிட்டால் ‘இவனுக்கு இம்மாதிரி இசையை அளிக்கத் தெரியவில்லை’ என்று வதந்தி பரப்பிவிடுவார்கள். பொழப்பைப் பார்க்க வேண்டுமே! எனவே, 12 படங்களுக்கு அவ்வாறு இசை அமைத்துவிட்டு, நான் என் பாணியை நான் நினைத்த வகையில் மாற்றிக்கொண்டேன். என் கற்பனைக்கு ஏற்ற படங்கள் அமைந்ததும் தெய்வாதீனம். பிறகு நான் அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.

‘மூடுபனி’ திரைப்படத்தில், ஷோபாவுக்காகப் பிரதாப் போத்தன் ஆடை கள் வாங்கி வரும் காட்சியின் பின் னணி இசையில், ஸ்வர பிரயோகங்களின் இடைவெளிகள் அசாத்தியமாக இருக்கும். இதுவரை கேட்டிராத இசை அது. இப்படிப்பட்ட கற்பனை எப்படித் தோன்றியது?

இதற்கு என்ன சொல்வது! எங்கிருந்தோ வந்தது. என்னுள் புகுந்து அது வெளித்தோன்றியது. எங்கேயோ எப்பொழுதோ கேட்டதின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்.

தங்களது பல பாடல்களில் இரண்டாவது இடையிசை (II interlude) முதலாவது இடையிசையைவிட மிகவும் விசேஷமாக இருக்கும். ‘விழியிலே மணி விழியிலே’, ‘அந்தரங்கம் யாவுமே’, ‘ஏதோ நினைவுகள்’, ‘எங்கெங்கோ செல்லும்’ போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். இரண்டாவது இடையிசை மனதைக் கொய்து நம்மை வேறு ஒரு உலகத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

உண்மையில், இரண்டாவது இடையிசையைச் சிறப்பாக உருவாக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பது கிடையாது. ஒரு பாடல் உருவாகும்போது படிப்படியாகச் செல்வோம். முகப்பு இசையையும், முதல் இடையிசையையும் கோத்த பின்னர், ஒரு உந்துதலில் இரண்டாவது இடையிசை தானாகவே சிறப்பாக வந்துவிடும்!

‘வான் மேகங்களே’, ‘தம்தன தம்தன தாளம் வரும்’ போன்ற பல பாடல்கள், பின்னணி இசைக்கோவைகளில் வீணையைப் பல்வேறு விதங்களில் பயன்படுத்தியிருக்கிறீர்கள். கிடாருக்கு மாற்றாக வீணை, வீணைக்கு மாற்றாக கிடார் என்று புதுமையைப் புகுத்தி வியக்க வைத்தீர்கள்.

கற்பனைதான் அடிப்படைக் காரணம். உங்களை வியக்கவைப்பதுதானே என் வேலை. அதுதான் என் வெற்றி!

உங்களது பல பாடல்கள் தாளத்தில் வித்தியாசமாகத் தொடங்கும். சில வீச்சிலும் தொடங்கும். இது தியாகராஜ சுவாமிகளின் கிருதிகள் மீதான பக்தியால் உண்டானதா?

இருக்கலாம். வழிவழியாக நமது சங்கீதத்தில் அமைந்த கிருதிகளும், பாடல்களும் இம்மாதிரி வெவ்வேறு எடுப்பில் அமைந்து வந்திருக்கின்றன. அதையொற்றியே எனது பாடல்களும் அப்படி அமைகின்றன.

பரபரப்பாக இருந்த நேரத்திலும்கூட, சமஸ்கிருதத்தையும் கர்னாடக இசையையும் விடியற்காலை அதற்கென்று நேரம் ஒதுக்கிப் பயின்றீர்கள். என்ன காரணம்?

சமஸ்கிருதத்தில் எத்தனையோ விஷயங்கள் உண்டு. ஆதிசங்கரர் எண்ணற்ற ஸ்தோத்திரங்கள், பூஜை விதிமுறைகளை நமக்குப் பொக்கிஷமாகக் கொடுத்துள்ளார்கள். அவற்றை அறிய விரும்பி சமஸ்கிருதம் பயின்றேன். கர்னாடக இசையில் அந்தக் காலகட்டத்தில் எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லை. தெரியாத ஒன்றைப் பயிலலாமே என்று அதைக் கற்றேன். கற்பதில் ஆர்வம் அதிகம் இருந்ததால் என் புகழோ, நேரமின்மையோ ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. உயர்ந்த விஷயங்களை உயர்ந்த விஷயங்கள்தான் என்று கண்டுகொள்வது தவறா. உயர்ந்த விஷயங்களை நாம்தான் கண்டுகொள்ள வேண்டுமே தவிர உயர்ந்த விஷயங்கள் நம்மைக் கண்டுகொள்கிறதா என்பது கேள்விக்குறியே. கடவுளைப் போல..

கமல் - இளையராஜா கூட்டணி ரசிகர்களுக்குப் பெரும் விருந்து படைத்தது. கமலுடனான அனுபவம் ஏதேனும் ஒன்றைப் பகிர முடியுமா?

ராஜ்கமல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. பாடல்களை உருவாக்க அவர்களது அலுவலகத்துக்குச் சில கலைஞர்களுடன் சென்றேன். சிறிது நேரம் கமல் சார், படத்தின் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் சாருடன் பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். “சரி, கம்போஸ் செய்ய நான் ரெடி” என்றேன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள். “சிச்சுவேஷன் சொல்லுங்கள்” என்றேன் மீண்டும். “நாளை பூஜை. பாட்டு ஒண்ணு பதிவு பண்ணணும். கதை இன்னும் தயார் செய்யவில்லை. இப்போதைக்கு இதுதான் சிச்சுவேஷன்” என்றனர். சரி என்று நானும் ஒரு ட்யூன் தயார் செய்த பின், கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுத வந்தார். “என்னப்பா கதை, பாடலுக்கு என்ன சிச்சுவேஷன்?” என்றார். அவருக்கும் அதே பதிலை அவர்கள் கூற, கவிஞர் சிரித்துவிட்டு, என்னிடம் ட்யூனைப் பாடச் சொன்னார். பாடலும் தயாரானது. பின்னர் அந்தப் பாடலைப் படத்தில் பொருத்தமான ஒரு இடத்தில் வைத்தனர். பாடலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. அதுதான் ‘அழகே அழகு தேவதை’ பாடல். படம், ‘ராஜ பார்வை’!

‘ராஜ பார்வை’யில் ஒரு காட்சியில், வயலின் இசைக் கலைஞரான கமல் சோலோ வயலின் வாசிக்கும் காட்சியில், உங்கள் இசை அற்புதமாக வந்திருக்கும்.

ஆமாம். நல்ல ஒரு இசைதான் அது. கமல் சாருக்காக நான் இசையமைத்த படங்களின் பின்னணி இசை அத்தனையும் அவருக்கு அத்துப்படி. இன்று கேட்டாலும் காட்சிவாரியாகப் பாடிக் காட்டுவார். நல்ல இசை ஞானம் கொண்டவர் கமல்!

மும்பையில் ஒரு பாடல் பதிவின் முடிவில், பாடலை வாசித்த இசைக் கலைஞர்களெல்லாம் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபற்றி..

ஏவி.எம் தயாரித்த ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தின் ‘வானம் கீழே வந்தால் என்ன’ பாடல் பதிவை மும்பையில் செய்தோம். மும்பையில் 7-1 கால்ஷீட் என்றால், 11 மணிக்கு வருவதுதான் இசைக்கலைஞர்களின் வழக் கம் என்றனர். நானோ கண்டிப்பாக 7 மணிக்கு எல்லோரும் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டேன். மறு நாள் அனைத்துக் கலைஞர்களும் சரி யாக 7 மணிக்கு ஆஜர். 90 பேர் கொண்ட இசைக்குழு அது. இசைக்கலைஞர்களுக்கான இசைக் குறிப்புகளை அவர்கள் முன்பே 30 நிமிடத்தில் தயார் செய்தது அவர்களுக்கு ஆச்சரியம். ரிகர்சல் நேரத்திலேயே பாராட்டு மழை தொடங்கிவிட்டது. பாடல் பதிவை விரைவாகவே முடித்துவிட்டோம். பாடல் பதிவு முடிந்ததும் எல்லோரும் எழுந்து நின்று தொடர்ந்து கைதட்டிக்கொண்டே இருந்தார்கள்.

ஒரு படத்துக்காக நீங்கள் மெட்டமைத்த பாடல், வேறொரு படத்தில் இடம் பெற்றிருக்கிறதா?

உடுப்பியில் பாடல் கம்போஸிங். பாலுமகேந்திராவும் அங்கு படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தார். என்னைச் சந்தித்து அவரது ‘மூடுபனி’ படத்துக்கு, கதாநாயகன் கிடாருடன் பாடுவது போன்ற பாடல் ஒன்று வேண்டும் என்று கேட்டார். ‘இளைய நிலா பொழிகிறதே’ பாடலின் மெட்டைப் பாடிக்காட்டினேன். “இதுவேண்டாம். வேறு கொடுங்கள்” என்றார். ‘என் இனிய பொன் நிலாவே’ மெட்டைக் கொடுத்தேன். பிடித்துப்போய்விட்டது. பின்னர், ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இடம்பெற்ற ‘இளைய நிலா’ பாடலும் பெரிய அளவில் ஹிட் ஆனது. அவரது உதவியாளர்கள் அவரிடம், “என்ன சார் அதை இப்படி விட்டுவிட்டீர்களே” என்று கூற, “நான் என்ன செய்ய. ஆனால் ‘என் இனிய பொன் நிலாவே’ மட்டும் என்னவாம். சிறந்த பாடல்தானே” என்றாராம் பாலுமகேந்திரா. அப்பாடலும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது யாவரும் அறிந்ததே.

பாடலுக்குப் பாடகர்களை எவ்வாறு தேர்வு செய்வீர்கள்?

ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்து, அன்றைக்கான பாடல் என்ன, என்ன ஸ்ருதி, தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ஆகியவற்றை எழுதிவிட்டு, 30 நிமிடங்களில் பாடலுக்கான இசைக் குறிப்புகளையும் தயார் செய்துவிட்டு பாடகரின் பெயரை எழுதுவேன். அந்த க்ஷண நேரத்தில் தோன்றுவதுதான். குறிப்பிட்ட பாடகர் அன்று இல்லாவிட்டால், வேறு ஒருவரைச் சொல்லுவேன். பாடகர்கள் யாரும் கிடைக்காவிடில் நானே பாடிவிடுவேன். நான் பாடிய பல பாடல்கள் அவ்வாறு பதிவுசெய்யப்பட்டவைதான்!

மெல்லிசை மன்னர் எம்எஸ்வி பற்றி..

(ஒரு நிமிடம் கண்ணை மூடி தியான நிலைக்குச் சென்றுவிட்டு..) அவர் மிகச் சிறந்த இசையமைப்பாளர்!

பாரம்பரிய மேற்கத்திய இசை, நமது பாரம்பரிய இசை பற்றி..

மேலைநாடுகளில் நடக்கும் ‘கிளாசிக்கல் வெஸ்டர்ன் கான்ஸர்ட்’ நிகழ்ச்சிகளில், கேட்க வரும் ரசிகர்களின் ஒழுக்கம் பலமுறை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எல்லோருக்கும் அங்கு வாசிக்கப்படும் இசைக் கோவைகள் பற்றி நன்றாகத் தெரிந்து இருக்கிறது. 200-300 வருடங்களுக்கு முன்பு இருந்த இசையை அப்படியே வாசிக்கிறார்கள். எப்படி? மொஸார்ட், பீத்தொவன், ஷாக்கியொவாஸ்கி போன்ற மேதைகள், ஏற்ற இறக்கங்கள், வளைவுகள், வேகம் என்ன என்று எல்லாவற்றையும் அன்றே குறிப்புகளுடன் எழுதிவைத்தார்கள். அவர்களின் இசை, சமுதாயத்துக்காக எழுதப்பட்டது. நமது கர்னாடக, இந்துஸ்தானி இசையோ உள்ளிருக்கும் ஆத்ம சுத்திக்காக உருவானவை. ஆனால் நமது இசையில் இம்மாதிரியான குறிப்புகள் இல்லை. நமது இசையைக் குறை சொல்லவில்லை. நம் இசையை ஸ்வரப்படுத்தி எழுதி ஒரு வடக்கத்தி இசைக் கலைஞரிடம் கொடுத்தால் வாசிப்பாரா? வாசிக்க மாட்டார். நமது இசை உயர்வானதென்றாலும், செவி வழியாகவே வந்துள்ளது. அவர்களது இசைக் குறிப்புகள் போல இலக்கண சுத்தமான இசைக் குறிப்புகள் இங்கே இல்லை. தோடி ராகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். (ஒரு பிடியைப் பாடுகிறார்) இது காந்தாரமா, ரிஷபமா, மத்யமமா என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒரு குழப்பம். நொட்டேஷன் சிஸ்டம் இங்கே முழுமையாக இல்லை. நமது இசையை, நன்றாகக் குறிப்புகள் எழுதி ஒரு சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவிடம் கொடுத்து, அவர்கள் அதை வாசித்தால் எவ்வளவு பிரமிப்பு ஏற்படும். ஆனால் அது இல்லை என்பதுதான் என் வருத்தம்.

மியூசிக் அகாடமியோ, அரசாங்கமோ இதில் மெனக்கெட வேண்டும். நமது இசையை இன்னும் பலர் புரிந்துகொண்டு ரசிக்கும்படியாகவும், நொட்டேஷனைப் பார்த்த மாத்திரத்தில் அதைப் பாடவோ, இசைக்கவோ செய்யுமாறும் என்னால் ஒரு திட்டம் வகுத்து, வெற்றிகரமாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். வல்லுநர்கள் முன்வந்தால் நானும் அதில் கலந்துகொள்ளத் தயாராக உள்ளேன்.

பொதுவாக இசையைப் பற்றி..

நான் இசை என்று சொன்னால், நீங்கள் உடனே திரை இசையைத்தான் நினைப்பீர்கள். திரை இசையைத் தாண்டி ஒரு இசை இல்லையா? கர்னாடக இசையைத் தாண்டி ஒரு இசை இல்லையா? பாரம்பரிய மேற்கத்திய இசையைத் தாண்டி ஒரு இசை இல்லையா? இவை எல்லாவற்றையும் தாண்டி இசை ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கிறது. ஒரு பாடகர் ஒரு ராகத்தைப் பாடும்போது அதை ரசிக்க வேண்டும். மாறாக, உங்களுக்குப் பிடித்த ராகத்தைப் பாடினால் மட்டுமே அவனை அங்கீகாரம் செய்வது என்பது தப்பானது. அதேபோல ஒரு சினிமா பாடலை ‘இது நன்றாக இல்லை’ என்று நொடிப்பொழுதில் நிராகரிப்பதும் பெரிய தவறே. அதில் என்ன இருக்கிறது என்று உனக்கு என்ன தெரியும்? எப்படி நம் மனதுக்குப் பிடித்த சாப்பாட்டை மட்டுமே உண்ணும் தன்மையைப் போல, நம் மனதுக்குப் பிடித்த இசையை மட்டும்தான் கேட்பேன் என்ற நோக்கு மிகவும் தவறானதொன்றாகும். எல்லாவற்றையும் தாண்டி ஒரு இசை இருக்கிறது என்பதை உணரவேண்டும். நான் இன்னும் இசையை முழுமையாகக் கற்கவில்லை. தெரிந்துகொள்ள வேண்டியவை இன்னும் உள்ளன. இன்னும் என்ன இருக்கிறது என்று தேடிக்கொண்டிருந்தாலும், இசைக்கு என்னை நன்றாகத் தெரியும். இசை என்னைக் கண்டுபிடித்துவிட்டது!


Related Articles

Popular Articles

You May Like

More From This Category

More From this Author