'ஜெனோவா' படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பதை முதலில் விரும்பாத எம்.ஜி.ஆர்., பிறகு அவர் இசை அமைத்த பாடல்களைக் கேட்டு விட்டு பாராட்டினார்.
ஜுபிடர் பிக்சர்சார், கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். குத்தகை காலம் முடிவுக்கு வந்தது. ஊழியர்களை ஜுபிடர் அதிபர் அழைத்து, அனைவரது கணக்குகளையும் முடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
அப்போது எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எம்.எஸ்.விஸ்வநாதனை முதலாளியிடம் அழைத்துச் சென்றார்.
'இதோ பாருங்க! இந்தப் பையனை சாதாரணமாக நினைக்க வேண்டாம். ரொம்ப விஷயம் தெரிந்த பையன். ரொம்ப நல்லா வரக்கூடியவன். உங்களுக்கு இப்பொழுது ஒரு உண்மை சொல்லப் போகிறேன். நீங்கள் இங்கே எடுத்து வெளியிட்ட படங்களில், நான் இசையமைத்து பாப்புலரான பாட்டுகள் எல்லாம், இவன் போட்ட டிïன்கள்தான். என் பெயர் மட்டும் வெளியானதே தவிர, உண்மையில் இவன்தான் இசை அமைத்தான். இவன் பெரிய சொத்து. விட்டு விடாதீர்கள்' என்று சுப்பையா நாயுடு, விஸ்வநாதனை பற்றி முதலாளியிடம் கூறினார்.
1948-ம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதனை ஜுபிடர் பிக்சர்சின் முதலாளிகள் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னைக்கு வந்ததும், இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனிடம் விஸ்வநாதன் சேர்ந்தார். அப்போது அந்த இசைக்குழுவில் டி.கே.ராமமூர்த்தி, டி.ஜி.லிங்கப்பா, கோவர்த்தனன் ஆகியோர் உதவியாளர்களாக இருந்தனர். இந்த குழுவினர் 'சொர்க்கவாசல்', 'தேவதாஸ்' ஆகிய படங்களுக்கு இசை அமைத்தனர்.
அப்போது எஸ்.எம்.ராஜா என்பவரை விஸ்வநாதன் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. விஸ்வநாதனை, சந்திரா பிக்சர்சுக்கு ராஜா அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த சமயம் 'ஜெனோவா' என்ற படத்தை சந்திரா பிக்சர்ஸ் பேனரில் ஈ.பி.ஈப்பச்சன் தயாரித்தார். படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர். கதாநாயகி பி.எஸ்.சரோஜா.
அந்தப் படத்திற்கு எம்.எஸ்.ஞானமணி என்பவரை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருந்தார்கள். இருப்பினும், புதிய இசையமைப்பாளரை போட வேண்டும் என்ற நோக்கத்துடன் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு வாய்ப்பு அளிக்க பட அதிபர் முன்வந்தார். கவிஞர் சுரதா பாட்டு எழுதினார்.
பகலெல்லாம் சி.ஆர்.சுப்பராமன் இசை அமைப்புக்கு உதவி செய்து விட்டு, இரவு முழுவதும் கண் விழித்து 'ஜொனோவா'வுக்கு இசை அமைத்தார், விஸ்வநாதன்.
4 பாடல்களுக்கு இசையமைத்து ஒலிப்பதிவுக்கு தயாரானார்.
பதிவு செய்யப்பட்ட பாடல்களை கேட்ட தயாரிப்பாளர் ஈப்பச்சன், டைரக்டர் எப்.நாகூர் ஆகியோருக்கு பாடல்கள் பிடித்துப்போயின.
ஆனால், எம்.ஜி.ஆர். பாடல்களைக் கேட்கவில்லை. இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று அறிந்ததுமே அவருக்கு உற்சாகம் குறைந்து போய்விட்டது.
'விஸ்வநாதனா? ஜுபிடரில் எடுபிடி வேலை செய்து கொண்டு இருந்த பையன் ஆயிற்றே. அவருக்கு இசை பற்றி என்ன தெரியும்? வேண்டாம், உடனே மாற்றுங்கள்' என்று கூறினார்.
ஆனால், விஸ்வநாதன்தான் இசை அமைப்பாளர் என்பதில் பட அதிபர் உறுதியோடு இருந்தார்.
'விஸ்நாதன் இசையமைத்த பாடல்களை ஒருமுறை கேட்டு பார்த்துவிட்டு, உங்கள் அபிப்பிராயத்தை கூறுங்கள்' என்று பட அதிபரும், மற்றவர்களும் கூறினார்கள்.
அதன்படியே, பாடல்களைக் கேட்டார், எம்.ஜி.ஆர். அவருடைய எண்ணம் அடியோடு மாறியது. மந்தைவெளியில் உள்ள விஸ்வநாதன் வீட்டுக்கு சென்று, அவரைப் பாராட்டினார்.
தன்னுடைய எதிர்காலம் பற்றி விஸ்வநாதனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. தனது தாத்தாவையும், தாயாரையும் சென்னைக்கு அழைத்து வந்து, தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார்.