நான்...செந்தில்



யாரையும் சொரண்டி பழக்கமில்ல. அதனாலேயே இன்னைக்கு நல்ல நிலைல இருக்கேன்.

திரைக்கு முன்னாடி நானும் கவுண்டமணி அண்ணனும் நடிகர்கள். திரைக்குப் பின்னாடி நாங்க நல்ல நண்பர்கள். இப்ப வரை அந்த நட்பு எங்கயும் உடையவே இல்ல. எனக்கு அப்ப 13 - 14 வயசிருக்கும். அப்பா திட்டிட்டாரு. அப்படியே வண்டி ஏறினவன்தான். இதோ இப்ப இங்க வந்து நிக்கிறேன்.
இராமநாதபுரம் முதுகுளத்தூர் பக்கத்துல இளஞ்செம்பூர் கிராமத்துல பிறந்தேன். அப்பா பெயர் இராமமூர்த்தி. அம்மா பெயர் திருக்கம்மாள். பள்ளிப் படிப்பெல்லாம் சும்மா ஏதோ போகணும்னு போனதுதான். ஸ்கூல்ல படிக்கிறப்பவே இந்த நாடகம், நடிப்புல கலந்துக்குவேன். அப்பவே சினிமா ஆசையும் வந்துடுச்சு.

அப்பா மண்டி வச்சிருந்தார். மொத்த வியாபாரி. கூடப் பிறந்தவக ஆறு பேர். நான் மூணாவது ஆளு. அந்த வயசுக்கே உண்டான சேட்டை. அப்பா திட்டி, அடிச்சுட்டார். வீட்டுக்குப் போனா எங்க திரும்ப அடி கிடைக்குமோன்னு பயந்து அப்படியே கிடைக்கற வண்டிகளைப் பிடிச்சி சென்னை வந்து சேர்ந்தேன். வந்த உடனே சாப்பிடணுமே... எண்ணெய் மில்லுல வேலைக்கு சேர்ந்தேன். அப்பறம் ஒயின்ஷாப்ல வேலைக்கு போனேன். பிறகுதான் நாடகங்கள்ல வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன்.

கிடைக்கற மேடை நாடகங்கள்ல எல்லாம் விடாம நடிச்சேன். நிறைய சினிமா நண்பர்கள் பழக்கமானாங்க. எல்லார்கிட்டயும் சான்ஸுக்காக சொல்லி வெச்சுடுவேன். அப்படி அமைஞ்சதுதான் முதல் படம். ‘ஒரு கோயில் இரு தீபங்கள்’ - இதுதான் முதல் படம். ஒரு சின்ன காட்சியில வந்து போவேன். அடுத்து ‘பசி’ படத்துல ஒரு கேரக்டர்.

அப்ப எல்லா மொழி சினிமா வேலைகளும் சென்னைலதான் நடக்கும். சின்னச் சின்ன கேரக்டர்களுக்கு எல்லாம் செலவு பண்ணி ஆள் கூட்டிட்டு வர மாட்டாங்க. சென்னைல இருக்கற நடிகர்களையே கூப்பிட்டுக்குவாங்க. அப்படிதான் 1980ல எனக்கு ஒரு மலையாளப் படம் அமைஞ்சது - ‘இத்திக்கார பக்கி’. பெரிய மலையாள நடிகரான பிரேம் நசீர் நடிச்ச படம்.

இந்தப் படம்தான் நான் நடிச்சு வெளியான முதல் படம். அப்பறம்தான் ‘ஒரு கோயில் இரு தீபங்கள்’, ‘பசி’ படங்கள் எல்லாம் வெளியாச்சு.
தொடர்ச்சியா ‘கிளிஞ்சல்கள்’, ‘மௌன கீதங்கள்’, ‘இன்று போய் நாளை வா’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’... இப்படியே ‘பொய் சாட்சி’ வெளியாச்சு.
என் பெயர் அப்பதான் வெளியே தெரிய ஆரம்பிச்சது. பாக்கியராஜ் சார் படம். அடுத்தடுத்து அவருடைய படங்கள்ல எனக்கு வாய்ப்பு கொடுக்க ஆரம்பிச்சார்.

எனக்கு முன்னாடியே கவுண்டர் சார் நிறைய படங்கள்ல நடிச்சிட்டிருந்தார். குறிப்பா ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘16 வயதினிலே’ இப்படி பெரிய பெரிய கேரக்டர்கள்ல நடிச்சிட்டு இருந்தார். இந்த வேளைலதான் ஆர்.சுந்தரராஜன் சார் ‘வைதேகி காத்திருந்தாள்’ இயக்கினார். அவர் நல்லா காமெடி வசனம் எழுதுவார். அவர் கொடுத்த பாத்திரம்தான் அந்த ‘ஆல் இன் ஆல் அழகுராஜா - கோமுட்டி தலையா’ ரெட்டையர்.

அங்க ஆரம்பிச்சது கவுண்டமணி - செந்தில் கூட்டணி. அப்ப எல்லாம் காமெடி டிராக் தனியா எழுதுவாங்க, சுருளிராஜன், ஏ.கே. வீரப்பன்... இப்படி காமெடி டிராக் எழுத நிறைய பேர் இருந்தாங்க. இவங்கல்லாம் நாடகங்கள்லருந்து வந்தவங்க. அவ்வளவு அற்புதமான காமெடிகள் எழுதுவாங்க.
‘வைதேகி காத்திருந்தாள்’ ஹிட் ஆச்சு. அடுத்தடுத்து நாங்க ரெண்டு பேரும் சேந்தே வேணும்னு படங்கள்ல கேட்க ஆரம்பிச்சாங்க. கிரேஸி மோகன் காமெடி வசனங்கள் எல்லாம் நாள் முழுக்க சிரிக்கலாம். அவங்க கொடுக்கற வசனத்துல நாங்க எங்க தனித்துவத்தையும் காட்டினோம்.

ஒரு காமெடில வடிவேலுவும் நானும் இளநீர் விற்போம். அதுல ‘எங்கருந்துடா காசு வருது’ன்னு கேட்டா ‘சிங்கப்பூர்ல இருந்து மாமா காசு அனுப்புறாரு’ன்னு சொல்வோம். அங்க கம்யூனிசம் பேசியிருப்பார் கவுண்டமணி சார். ‘என்னடா யாரைக் கேட்டாலும் சிங்கப்பூர் காசு, மலேசியா காசுன்னு சொல்றீங்க... அப்ப நம்ம நாட்லலாம் காசே இல்லையா, நம்ம நாட்டு காசு எங்கடா அப்போ’ன்னு கேட்பார்.

கவுண்டமணி சார் கிட்ட இயற்கையாவே அந்த காமெடி பேச்சு வந்து விழும். பேசவே முடியாது அவர்கிட்ட. மனுஷன் வார்த்தைக்கு வார்த்தை கவுன்டர் கொடுப்பார். அவரை கவுன்டர் மணினுதான் நாங்க புகழ்வோம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சாகணும்னு காத்திருந்த இயக்குநர்கள் எல்லாம் கூட உண்டு. இதற்கிடைல ஹீரோவா நடிக்க வாய்ப்புகூட கிடைச்சது. ஆனா, வேண்டாம்பா அந்த ஆசைன்னு முடிவு செஞ்சு, எது நமக்கு நிரந்தரமோ அதுலயே போகலாம்னு இப்பவரை மனசை மாத்திக்கலை.

இடைல இயக்குநர் ஆகுற வாய்ப்புகூட வந்தது. சொன்னால் நம்பமாட்டீங்க... ரஜினி சாரே ‘படம் இயக்குங்க... நான் நடிக்கிறேன்’னு சொன்னார். ஆனா, எதுவும் வேண்டாம்; நமக்கு என்ன தெரியுமோ அதைச் செய்யலாம்னு இருக்கேன். பெரும்பாலும் நான் நடிக்கிற காலங்கள்ல எனக்கு சம்பந்தம் இல்லாத விழாக்கள், நிகழ்ச்சிகள்ல பெருசா கலந்துக்க மாட்டேன். கொஞ்சம் நல்ல பெயரெல்லாம் சம்பாதிச்சு, ஊரெல்லாம் பிரபலமான உடனே வீட்டுக்குப் போயி அப்பாவை சந்திக்கணும்னு ஆசை.

ஊரே என்ைன வரவேற்க, அப்பாவுக்கு அவ்வளவு சந்தோஷம். அப்படியே ஊர்ல ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணமும் பண்ணிக்கச் சொன்னாக.
அவுக பெயரு கலைச்செல்வி. எனக்குன்னு ஒரு குடும்ப அமைப்பு வந்தது அவுக வந்தப்பறம்தான். எனக்கு காசு வரும். அதை என் மனைவிகிட்ட கொடுப்பேன். அவ்வளவுதான் தெரியும். மத்ததெல்லாம் அவுக கன்ட்ரோல்தான். பசங்க படிப்பு, வீட்டுப் பராமரிப்பு எல்லாம் அவங்கதான் நிர்வாகம் செய்தாங்க.

நாங்க ஊர் ஊரா ஷூட்டிங் போவோம். இப்ப மாதிரி அப்ப போன் எல்லாம் கிடையாது. தகவல் வரும். அதுவும் நாங்க எங்கயாவது கிராமப்புறங்கள்ல ஷூட்டிங்னு கிடப்போம். எந்தக் கேள்வியும் இல்லாம குடும்பத்தைத் தாங்கிட்டு இருந்தாங்க. பசங்க ரெண்டு பேரு - மணிகண்டபிரபு, ஹேமச்சந்திர பிரபு. பெரிய பையன் டாக்டர். சின்னவரு அனிமேஷன் பக்கம் போயிட்டார்.

கவுண்டர் சாரும் நடிக்கிறதை ஒரு கட்டத்திலே நிறுத்திட்டார். நான் தனியா சில படங்கள் நடிச்சுட்டு இருக்கேன். இப்ப அடுத்தகட்டமா சீரியல்கள்ல நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். சினிமாவுக்கும், நாடகத்துக்கும் பெரிய அளவுல இப்ப வித்யாசம் இல்ல. அங்கே இருக்க அளவுக்கு இங்கயும் வேலை இருக்கு.
சன் டிவில ‘ராசாத்தி’ பண்ணிட்டிருக்கேன். வெள்ளித்திரைல மட்டும் வந்துட்டு இருந்தவனை வீட்டுக்கே கொண்டு போய் சன் டிவி சேர்த்திருக்கு.

இது இல்லாம அரசியல்... உங்களுக்கே தெரியுமே.... நாமெல்லாம் எம்ஜிஆர் படங்கள் பார்த்தே நடிக்க வந்தவக. அவர் காலத்துலயே கட்சி, கொடினு சுத்திட்டு இருப்பேன். அவரு போனதுக்கு அப்பறமும் அதே கட்சி, அதே பாதை. அவ்வளவுதான். பதவி கூட கிடைச்சது. ஆனா, இன்னைக்கும் அடிப்படைத் தொண்டனாதான் என் கடமையை செய்துட்டு இருக்கேன். பலரும் கவுண்டர் சாரும் நானும் திரும்பவும் சேர்ந்து நடிப்போமானு கேட்கறாங்க. அதெல்லாம் என் கைல இல்ல. இயக்குநர்கள் கான்செப்ட் கொண்டு வந்து கவுண்டரும் ஓகே சொல்லிட்டா நான் என்ன வேண்டாம்னா சொல்லப் போறேன்?

எங்க நட்பு இன்னமும் அப்படியே பசுமையா இருக்கு. இந்தக் கால நட்புகள் மாதிரியெல்லாம் இல்ல. இப்ப ஒரு கூட்டணி ரெண்டு மூணு படம் சேர்ந்து செய்தாலே பெரிய விஷயம். நாங்க அப்படியில்ல. ஷூட்டிங் இடைவெளிகள்ல அவ்வளவு கதைகள் பேசுவோம். பேசி சிரிச்ச காமெடிகள் கூட அப்படியே படங்கள்ல வந்திருக்கு.

நாங்க ஆளாகி நிக்க மீடியாக்களும் ஒரு காரணம். என்ன அப்ப இந்த அளவுக்கு மீடியாக்கள் இல்ல. இப்ப நடிப்பு, பாட்டுனு எல்லாத்துக்கும் போட்டிகள் நடத்தி திறமைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர்ற வேலையை எல்லா டிவியும் பத்திரிகையும் செய்யறாங்க. அப்ப இந்தளவு மீடியாக்கள் இருந்திருந்தா ஒருவேளை எங்க காமெடிகள் இன்னமும் பெரிய அளவுல கூட போயிருக்கும் போல.

அப்ப பூஜை போட்டதுமே படம் வித்துடும். நட்பு வட்டங்களும் சினிமாவுக்குள்ள அதிகமா இருந்த காலம் அது. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் எல்லாம் நண்பர்களாத்தான் இருப்போம். இப்பவும் அந்த நட்புகள் எங்களுக்குள்ள இருக்கு.

சாப்பாட்டுக்கு பஞ்சமே இருக்காது. காசு பணம் எல்லாம் ரெண்டாவதுதான். மனுஷங்களை நிறைய சம்பாதிச்சிருக்கேன். என் சொத்துக்குத்தான் பிரச்னைகள் வந்ததே தவிர என்னால யாருக்கும் பிரச்னைகள் வந்ததில்ல. யாரையும் சொரண்டி பழக்கமில்ல. அதனாலேயே இன்னைக்கு நல்ல நிலைல இருக்கேன்னு சொல்லலாம்!

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்